தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு மே 7ஆம் தேதி பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருந்தாலும் தற்போது வரை அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி வெளியிட்டுள்ளார். இதுபற்றி பேசிய அவர், இன்னும் ஒரு வருடத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பிறகு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும். மேலும் கூட்டுறவுத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை களில் 5 ஆயிரம் பணியிடங்கள் ஆறு மாதங்களில் நிரப்பப்படும். சத்துணவு பணியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் படி கட்டாயம் நிதி உதவி வழங்கப்படும். 20 ஆண்டுகளுக்கு திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று அவர் கூறியுள்ளார். எனவே விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.