தமிழகத்தில் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டில் புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசாக 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகை பொருட்களும் அடங்கும் என கூறப்படுகிறது. இதில் பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் இப்பொருட்கள் வழங்கப்படும் . குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் திட்டமானது பொங்கல் பண்டிகை முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நடப்பாண்டில் பொங்கல் பண்டிகைக்கு ரொக்க தொகை வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது.