நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் திட்டம் உள்ளது. உணவு வழங்கல் துறை மூலம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடைகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ரேஷன் கடைகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் இலவச மளிகை பொருட்களை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் புதிய திட்டமாக இல்லம் தேடி ரேஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் இல்லம் தேடி ரேஷன் திட்டத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலமாக 10 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டம் வெற்றி பெற ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரும் உதவ வேண்டும். பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். பொருட்களை விநியோகம் செய்ய தேவையான வாகனங்களை வாங்க தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.