குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள மருதம்பட்டி காலனியில் கொத்தனாரான முகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷிவானி, ரிதன்யா ஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஜோதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மயக்கம் செலுத்திய சிறிது நேரத்தில் ஜோதி முற்றிலும் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அறுவை சிகிச்சை செய்யாமல் ஜோதியை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியில் ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஜோதியின் உறவினர்கள் அவரது இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இது குறித்து முகேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.