கர்நாடக மின் பரிமாற்ற கழகத்தில் 1974 ஆம் வருடம் டிசம்பர் 18ஆம் தேதி ஜனார்த்தனா என்பவர் பணியாளராக இணைந்திருக்கிறார். அதன்பின் 1978 ஆம் வருடம் ஜூலை 23ஆம் தேதி பணி காலத்திலேயே வாகன விபத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து ஜனார்த்தனாவின் மனைவி சாரதா தனக்கு புதிய விதிமுறைகளின் அடிப்படையில் குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே ஜனார்த்தனா இறந்துவிட்டதால் அவரது மனைவி சாரதாவிற்கு குடும்ப பென்சன் வழங்க முடியாது என நீதிமன்றத்தில் கர்நாடக மின் பரிமாற்றம் வாதித்துள்ளது. இதனையடுத்து 2015 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒற்றை நீதிபதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது சாரதாவுக்கு குடும்ப பென்ஷனும் வட்டியுடன் சேர்த்து பென்ஷன் நிலுவை தொகை வழங்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கர்நாடக மின் பரிமாற்ற கழகம் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணா, தீக்சித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது இதுபோன்ற விவகாரங்களில் விதிமுறை அடிப்படையில் செயல்படும் முடியுமே தவிர அதன் அடிப்படையில் நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். அப்போது கர்நாடக மின் பரிமாற்ற கழகத்தின் வாதத்தை ஏற்று ஒற்றை நீதிபதி அமர்வின் தீர்ப்பை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதாவது சாரதாவுக்கு புதிய விதிமுறைகளின் அடிப்படையில் குடும்ப பென்ஷன் மற்றும் நிலுவை தொகை வழங்க முடியாது என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.