குட்கா கடத்தலில் ஈடுபட்டு கைதான 2 பேரை குண்டர் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள காட்டூர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார்.மளிகை கடைக்காரரான இவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரிடம் இருந்த 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த மாதம் 11ஆம் தேதி செந்திலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்துள்ளனர்.
இதேபோல் கடந்த மாதம் 9ஆம் தேதி திருச்செங்கோடு அருகே உள்ள தேக்கடி பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக குட்காவை கடத்தி வந்த ஈரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 270 கிலோ குட்கா பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் குட்கா வழக்கில் கைதான சதீஷ்குமார் மற்றும் செந்தில் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் பரிந்துரை செய்துள்ளார். அதனை பரிசீலித்த ஆட்சியர் ஸ்ரேயா சிங் கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் செந்தில் மற்றும் சதீஷ்குமார் மீது குண்டர் சட்டத்தில் வழக்குபதிவு செய்துள்ளனர்.