காட்டு யானைகள் குட்டியுடன் உலா வருவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணேசபுரம், பேத்துப்பாறை அஞ்சு வீடு உள்ளிட்ட மலை கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மா, பலா, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக குட்டியுடன் வலம் வரும் இரண்டு காட்டு யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. எனவே காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காட்டு யானைகள் வராமல் இருக்க அகழிகளை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது காட்டு யானைகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். இந்நிலையில் பேத்துப்பாறை பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.