கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. அதன் பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து தொற்று பரவல் காரணமாக 9 முதல் 11-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி அடைந்ததாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 12-ஆம் வகுப்புக்கு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேர்வு கட்டணத்தை நாளை முதல் செலுத்தவும், தேர்வு கட்டணத்தை வசூலித்து வருகிற 20-ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் ஆணையிட்டுள்ளது. இந்நிலையில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயிலும் எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.