தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது ரேஷன் கடைகளில் சரியாக பொருட்களை வழங்குவது இல்லை என்று பற்றிய புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்படும் பாமாயில் எண்ணெய் சரியாக வழங்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்ததைத் தொடர்ந்து, அம்மாவட்ட ஆட்சியர் மோகன் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் திடீர் எவ்வளவு பாமாயில் எண்ணெய் இருப்பு உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது குறைந்த அளவே எண்ணெய் இருப்பதாகவும், கூடுதலாக பாமாயில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரேஷன் அதிகாரி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு விடுபடாமல் பாமாயில் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்குவதில் முறைகேடு கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.