சிவகிரி எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த எல்லை மாகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் மாசி மாதத்தில் குண்டம் மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்திற்கான விழா கடந்த 1ஆம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி நிலையில் அந்த நாளில் பக்தர்களுக்கு காப்பு கட்டி தொடங்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு இரவு அம்மனுக்கு பூச்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று காலை 8 மணி அளவில் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு மாலை 6 மணி அளவில் குண்டம் விழா தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கையில் குழந்தை வைத்துக்கொண்டு அலகு குத்தி, தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்கள். இதைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு படைத்து அம்மனை வழிப்பட்டனர். இதைத்தொடர்ந்து நாளை திங்கள் கிழமை மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறவுள்ளது.