துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பசுமலைபட்டியில் காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைந்துள்ளது. கடந்த மாதம் 30-ஆம் தேதி திருச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 2 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டில் அமர்ந்திருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துவிட்டது. இதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் சிறுவனின் தலையில் இருந்த குண்டை மருத்துவக்குழுவினர் அகற்றிவிட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புகழேந்தி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த உடன் புகழேந்தியின் உறவினர்கள் கொத்தமங்கலத்துப்பட்டி மற்றும் நார்த்தாமலை போன்ற பகுதிகளில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சிறுவனின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு கொத்தமங்கலத்தில் நார்த்தாமலை மற்றும் கட்டியவள் நான்குவழிச் சாலை போன்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.