ஹர்ஜோத் சிங் உக்ரைனில் நடந்து வரும் கடும் போரின்போது, கீவ் நகரில் குண்டு காயமடைந்து கடும் போராட்டத்து இடையே தாயகம் திரும்பியுள்ளார். இவர் கீவ் நகரில் உடலில் 2 இடங்களில் குண்டு காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று(மார்ச்.7) 700 கி.மீ. தொலைவுக்கு சாலை வழியாக பயணித்து உக்ரைனின் எல்லையைக் கடந்து போலந்து வந்தடைந்தார். இவ்வாறு மிகவும் சவாலான சாலைப் பயணத்தை மேற்கொண்டு ஹர்ஜோத் சிங் போலந்து வந்த நிலையில், அங்கு இருந்து இந்திய விமானப் படை சி-17 விமானம் மூலமாக தில்லிக்கு அருகே உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தை வந்தடைந்தார்.
கீவ் நகரில் இருந்து போலந்து வந்தடையும் வரை அவரது பயணங்கள் எதிர்கொண்ட சவாலை உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகம் அவ்வப்போது தெரிவித்து வந்தது. கடும் போர் நடந்து கொண்டிருக்கும் கீவ் நகரில் இருந்து குண்டு/ ஏவுகணை மழை பொழியும் போர்க் களத்திலிருந்து 700 கி.மீ. பயணித்து, குண்டு காயமடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் இந்தியா திரும்பினார் என்று சுட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஏவுகணை, வெடிகுண்டு தாக்குதல்கள், எரிபொருள் பற்றாக்குறை, சாலைகளில் தடைகள், மாற்றுப் பாதைகளைக் கண்டறிதலில் சிக்கல், போக்குவரத்து நெரிசல் என்று பல்வேறு ஆபத்துகளையும் சவால்களையும் கடந்து ஹர்ஜோத்தை 700 கி.மீ. தூரம், கீவ் நகரில் இருந்து போலந்து எல்லைக்கு அழைத்து வந்த இந்திய தூதரக வாகன ஓட்டுநருக்கு மனமார்ந்த பாராட்டுகள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.