குன்னூர் அருகே பழங்குடியின மக்கள் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்து வருகின்ற நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட உலிக்கல் பேரூராட்சியில் குரங்குமேடு கிராமம் உள்ள நிலையில் சென்ற 25 வருடங்களாக வசித்து வரும் பழங்குடியின மக்கள் தேயிலை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலை செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், சாலை, குடிநீர் எந்த அடிப்படை வசதியும் இல்லை. இவர்கள் குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தொலைவு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது.
மேலும் அப்படி எடுத்து வரும் பொழுது வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை இருக்கின்றது. இந்த நிலையில் கிராம மக்கள் எங்கள் கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. மாலை 6 மணிக்கு மேல் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. மேலும் சாலை வசதி இல்லை, மின்சார வசதி இல்லை. இதனால் சூரிய சக்தியை மட்டுமே நாங்கள் பயன்படுத்துகின்றோம். அதிகாரிகள் பலமுறை எங்கள் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்தபோதும் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் இந்த பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை எடுத்து எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.