திடீரென மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநகராட்சியின் நகரப் பகுதியில் குபேர் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் பிரஞ்சு காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. இந்த மீன் மார்க்கெட் கட்டப்பட்டு 5 வருடங்கள் ஆகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு இதுவரை மீனவர்கள் யாரும் செல்லவில்லை.
இதனால் நகரப் பகுதியில் மீன் வியாபாரத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மீன் வியாபாரிகள் இன்று குபேர் மீன் மார்க்கெட்டிற்கு சென்ற போது காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது மீனவர்கள் நகரப் பகுதியில் மீன் வியாபாரம் செய்ய அனுமதிக்கவேண்டும் எனக்கோரி முதலமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுக்கப் போவதாக கூறியுள்ளனர்.