தூய்மை பணியாளரை தாக்கிய குற்றத்திற்காக வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் சி.எம்.சி காலனியில் குப்புசாமி ஜோதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஜோதி தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜோதி ரங்கே கவுடர் வீதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வினோத் என்பவர் குப்பைகளை கொட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தருமாறு ஜோதி கேட்டதால் கோபமடைந்த வினோத் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார்.
இதனால் காயமடைந்த ஜோதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து ஜோதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வினோத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.