தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டிய ஆதார் அட்டைகள் குப்பைத் தொட்டியில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் அருகே உள்ள ராஜபாளையம் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இருக்கிறது. அந்த பள்ளிக்கூடத்தின் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த குப்பைத் தொட்டியில் 50 ஆதார் அட்டைகள் ஒரு கவருடன் கிடந்துள்ளன. அவை பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக தபால் அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
அதனை தூய்மைப் பணியாளர்கள் எடுத்து பஞ்சாயத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தூத்துக்குடி தபால் துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடந்த மாதம் தபால் பை ஒன்று காணாமல் போனது. அதிலிருந்த தபால்கள் ஆக இருக்கலாம் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்பிறகு பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த ஆதார் அட்டை தபால்களை அதிகாரிகள் பெற்று ஆய்வு நடத்தினர்.
அதில் தபால் பை காணாமல் போனதற்கு முன்பு உள்ள தேதி இருந்துள்ளது. அதனால் அதிகாரிகள் அந்த தகவல்களை பெற்றுக் கொண்டு, உரிமையானவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். அது மட்டுமன்றி அந்த தபால்களை குப்பைத் தொட்டியில் போட்டவர்கள் யார் என்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.