குப்பைத் தொட்டியில் லாக்கர் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கோ. புதூரில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரதியார் தெருவில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அடகு கடையில் இருந்த லாக்கரை திருடியுள்ளனர். அந்த லாக்கரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை எடுத்துச் சென்று உடைப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் லாக்கரை உடைக்க முடியாததால் அருகில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியில் லாக்கரை வீசிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் திங்கள்கிழமை காலை தூய்மைப் பணியாளர்கள் தெருவை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குப்பைத் தொட்டியில் லாக்கர் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோ. புதூர் காவல்துறைக்கு தூய்மை பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் குப்பைத் தொட்டியில் இருந்த லாக்கரை மீட்டு அதில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இதனையடுத்து அடகு கடைக்கு சென்று அங்கிருந்த தடயங்களையும் தடவியல் நிபுணர்கள் சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குப்பைத்தொட்டியில் லாக்கரை வீசி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த லாக்கர் குறித்து தகவல் தெரிவித்த தூய்மை பணியாளர்களான முத்து மற்றும் லட்சுமியை காவல்துறையினர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.