நாகை மாவட்டம் வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பணியாற்றும் ஒரு தம்பதியர் அங்குள்ள ஒரு குப்பை கிடங்கை விளை நிலமாக மாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ளது. வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தினமும் கொட்டப்படுவது வழக்கம் அவை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது. மட்காத குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்காக தினக்கூலி அடிப்படையில் சேகர் பரமேஸ்வரி தம்பதியர் பணியாற்றி வருகின்றனர்.
குறைந்த வருமானத்தில் வாடகை கொடுக்க முடியாத காரணத்தால் குப்பை மேட்டின் அருகிலேயே தங்கி அவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அடிப்படையில் விவசாய குடும்பத்தில் பிறந்த இந்த தம்பதியர் விவசாயம் மீது கொண்ட பற்றுதல் காரணமாக குப்பை மேட்டில் ஒரு பக்கத்தை தூய்மைப்படுத்தி இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி சோளம், வெண்டை, கத்தரி, அவரை செடிகளை பயிரிட்டு வருகின்றனர். இதனால் குப்பை மேட்டின் ஒரு பகுதியில் விளைநிலமாக காட்சியளிக்கிறது.
இதனை அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சொந்த பணத்தில் ஒரு மின் விசிறியை அந்த தம்பதிக்கு பரிசளித்து விவசாயத்தை ஊக்கப்படுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் வீடுகளில் மாடித்தோட்டம்,கொல்லைப்புறங்களில் காய்கறி தோட்டம் பயிரிடுவோருக்கு இங்கு தயார் செய்யப்படும் இயற்கை உரம் விலையின்றி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். வீதிகளில் குப்பை போடும் சக மனிதர்களுக்கு மத்தியில் குப்பைக்கிடங்கை பசுமையான சோலையாக மாற்றிய தம்பதியினரின் செயல் நிச்சயம் பாராட்டுக்குரியது.