திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கச்சேரி தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அதே தெருவில் புகழ்பெற்ற அபிராமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் தெருவின் ஓரத்தில் பள்ளிக்கு எதிரே குப்பைகளை குவித்து வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசி மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
நேற்று குவிந்து கிடந்த குப்பைக்கு யாரும் தீ வைத்ததால் குப்பைகள் தீப்பிடித்து எரிந்து பள்ளி வளாகம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதற்கிடையே குப்பையில் கிடந்த பட்டாசுகளும் திடீரென அடுத்தடுத்து வெடித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் நலன் கருதி அந்த இடத்தை தூய்மையாக வைக்க மாவட்ட நிர்வாகத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.