குப்பைகளை சாலையில் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் எச்சரித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வெங்கடேசா காலனி பகுதியில் நகராட்சி தலைவர் சியாமளா நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் ஆணையாளர் தாணுமூர்த்தி, அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நகராட்சி தலைவர் சியாமளா குப்பையை சாலையில் வீசிய கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் அனைத்து வீடுகளிலும் குப்பை சேகரிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மக்கும், மக்கா குப்பை என பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலானோர் குப்பையை தரம் பிரித்து கொடுப்பதில்லை .
இந்நிலையில் குப்பையை சாலையில் வீசிய கடையின் உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த பழக்கூடைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நகரை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், குப்பைகளை சாலையில் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.