சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் சேகர் (50) என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னை மாநகராட்சியில் குப்பைகள் அகற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் அடையாறு மண்டலம் வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 3-வது மெயின் தெருவில் குப்பை தொட்டியை தூய்மை செய்துகொண்டு இருந்தார். அப்போது புதைமின் வட கேபிள் சரியாக புதைக்கப்படாததால் தூய்மை செய்தபோது சேகருக்கு மின்சாரம் தாக்கியது.
இதனால் தூக்கிவீசப்பட்ட சேகர் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனே அங்கு இருந்தவர்கள் சேகரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சேகரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக வேளிச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.