குப்பை அள்ளுவது போல நடித்து 19½ பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியில் மர்மநபர் ஒருவர் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து உள்ளே இருந்த 19½ பவுன் நகை மற்றும் பணத்தை கடந்த 9-ஆம் தேதி திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது குப்பை அள்ளுவது போல் நடித்து ஒரு வாலிபர் சந்தேகப்படும்படி திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த சிவா(23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடி சென்றதை ஒப்புகொண்டார். மேலும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக குப்பை அள்ளுவது போல நடித்து திருடியது தெரியவந்துள்ளது.