திருப்பூர் அரசு மருத்துவமனையில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அப்பகுதி மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர்-தாராபுரம் சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் என பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு கொரோனா நோயாளிகளும் உள்ளனர். இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேரும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு அள்ள படாமல், மருத்துவமனை வளாகத்தில் மலை போல குவிந்து காட்சியளிக்கின்றன. அதே சமயத்தில் அங்கு மழையும் பெய்து கொண்டிருப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது. அது மட்டுமன்றி அந்த குப்பைகள் கிடக்கும் பகுதியில் பழைய கட்டில்கள் மற்றும் நாற்காலிகள் போன்ற தேவையற்ற பொருள்கள் அனைத்தும் வீசப்பட்டு வருகின்றன.
அதனால் அந்தப் பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்து உள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் குப்பைகளை கொட்டுவதால் அதனை பார்க்கும் மக்களும் அதனை செய்து வருகின்றனர். அதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் நோய் பரவும் அபாயமும் அதிக அளவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை அங்குள்ள நோயாளிகளும் கூறி வருகிறார்கள். அதனால் மாநகராட்சி ஏதாவது விரைந்து முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அப்பகுதி முழுவதும் உள்ள மக்களுக்கும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் .