தமிழகத்தில் காலியாக இருக்கும் அரசுப் பணிகளை நிரப்ப பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 6-ம் தேதி முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிள்ளியூர் பகுதியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பயிற்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இந்தக் கேள்விக்கு நிதித்துறை அமைச்சர் பிஆர்டி பழனிவேல் விளக்கமளித்தார். இவர் தமிழகத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது.
இது தொடர்பான முழுமையான ஆய்வை செய்ய வேண்டியுள்ளது. இதை ஆய்வு செய்வதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் முதல் கட்ட ஆலோசனை நடந்து முடிந்துள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து தொற்று குறைந்துள்ளதால் தற்போது போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்தப் போட்டித் தேர்வுகளில் பலரும் உற்சாகமாக விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆறு மாதத்திற்குள் பரிந்துரைகளை தரவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இந்த ஆய்வு முடிவடையும்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மொத்த கட்டமைக்கும் மாற்றப்படும். அப்போது காங்கிரஸ் உறுப்பினரின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.