பொதுமக்களை தங்க வைப்பதற்காக தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்கு நேற்று முன்தினம் முதல் நேற்று வரை மழையின் அளவு 49.23 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தொடர்ந்து மாவட்டத்தில் மழையின் அளவு கண்காணிக்கப்படுகிறது என்றார்.
அதன் பிறகு தோவாளை மற்றும் அகத்தீஸ்வரம் தாலுகா தாழ்வான பகுதிகளாக இருப்பதால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், கடலுக்குச் சென்ற 15 மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்ப வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து பொது மக்களை தங்க வைப்பதற்காக கிள்ளியூர், திருவட்டார், விளவங்கோடு, கல்குளம், தோவாளை மற்றும் அகதீஸ்வரர் உள்ளிட்ட பகுதிகளில் 50 இடங்கள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக 1077, 04652-231077 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.