Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கும்பகோணம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய வணிக நகரமாக திகழும் கும்பகோணம் கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. தொன்மையான சிவாலயங்களும், வைணவ ஆலயங்களும் அதிகளவில் அமைந்துள்ளன. கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். பித்தளை பாத்திரங்கள், குத்துவிளக்குகள், பஞ்சலோக விக்ரகங்கள் தயாரிக்கும் பணிகள் இங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. கும்பகோணத்தில் வெற்றிலையும், டிகிரி காபியும், பட்டு சேலைகளும் தனிசிறப்பு உடையவை ஆகும்.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், திமுக 6 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1996 முதல் தற்போது வரை 25 ஆண்டுகளாக தொகுதி திமுக வசமே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியின் எம்எல்ஏ திமுகவின் அன்பழகன் உள்ளார். கும்பகோணம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,72,506 ஆகும். கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

சாலை வசதிகள் முறையாக இல்லை என்பதுடன் இருக்கும் சாலைகளும் குண்டும், குழியுமாக காணப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. தொகுதியின் முக்கிய பிரச்சினையாக உள்ள போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், புறவழிச்சாலை மற்றும் மேம்பாலங்களை உருவாக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். கும்பகோணத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது மக்களின் விருப்பமாகும்.

பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் ஏற்படுத்தி தரம் உயர்த்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான திமுகவின் அன்பழகன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மருத்துவமனை கட்டிடங்கள், அரசு கல்லூரின் வகுப்பறைகள் என பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

Categories

Tech |