பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது ஆன்மிக வழிபாட்டிற்கு உரிய நாளாக அமைந்துள்ளது. வாரத்தில் மற்ற கிழமைகளில் பூஜை செய்வதை காட்டிலும், இந்த வெள்ளிக்கிழமைகளில் வழிபாடுகள் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவே சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நம்மால் இயன்ற அளவு இறைவனை பிரத்தியேகமாக வழிபட்டால் நீங்கள் கேட்ட வரம் உங்கள் கையில் அப்படியே கொடுப்பதற்கு இறைவன் சிறிதேனும் தயங்குவதில்லை என்பதே உண்மை. பொதுவாகவே நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் இறைவனை எவ்வாறு வழிபடவேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் அதாவது சூரிய உதயத்திற்கு முன்னதாக எழுந்து தலைக்கு குளித்து விட்டு, வீட்டின் பின் வாசல் கதவை முதலில் திறந்த பிறகு, வீட்டின் முன் வாசல் கதவை திறந்து திருமகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும். பின் கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி லட்சுமிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும்.
வீட்டு வாசலில் லக்ஷ்மிக்கு பெரிய கோலங்கள் ஆன தாமரை-கோலம், ஐஸ்வர்யம் கோலம் போன்றவற்றை வரைந்து திருமகள் வருக என்று கோல மாவினால் எழுதி வைக்கலாம். அஷ்டலட்சுமி இல்லத்தில் அடியெடுத்து வைக்க வேண்டுமென்றால் இந்தத் தூய்மை மிகவும் முக்கியமானதாகும்.
வீட்டில் வெங்கடேச சுப்ரபாதத்தை ஒலிக்க செய்ய வேண்டும், பின் பூஜை அறைக்கு சென்று முதற்கண் பிள்ளையாரை வழிபட்டு உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமி சுலோகம் கூறி பூஜை அறையில் கூறி விளக்கேற்ற வேண்டும். வெள்ளிக்கிழமை என்பதால் வீட்டில் உள்ள ஜோடி குத்து விளக்குகள் ஏற்றியும் வழிபட வேண்டும்.
இதனால் உங்கள் பூஜை அறைக்கு கூடுதலான பிரகாசமும், மங்கலமும் அஷ்டலட்சுமி கடாட்சமும் கிடைக்கும். அதன்பின் இறைவனின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை சாற்றி அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து இறைவனுக்கு பால், வாழைப்பழம், இனிப்பு பலகாரங்களை நிவேதனமாக படைக்கலாம்.
முக்கியமாக வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், வளையல் போன்ற மங்கலப் பொருட்களை ஒருசேர தாம்பூலம் வைத்து இறைவனை வழிபடுதலும் சிறப்பானதாகும். அடுத்ததாக வெள்ளிக்கிழமைதோறும் குபேர விளக்கு, தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்றி வந்தால் குபேரனின் அருள் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை வரும் சுக்கிர ஓரையில் தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து மகாலட்சுமி அஷ்டோத்திரம் கூறி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்பதும் விசேஷமானது. தொடர்ந்து ஒருவர் வெள்ளிக்கிழமைகளில் விரதத்தை கடைபிடித்து வந்தால், லக்ஷ்மி, முருகன், சுக்கிரன் ஆகியவரின் அருளும் ஒருங்கே பெறலாம்.
வெள்ளிக்கிழமைகளில் மாலையில் சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர்சக்திகள் இருந்தாலும் விலகிவிடும், அதோடு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதன்மூலம் வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு புத்துணர்வு கிடைக்கும். நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள் வெள்ளிக்கிழமைகளில் திருமகள் வழிபாட்டையும், ஆதிபராசக்தி முறையாக வழிபட்டால் கும்பிட்ட உடனேயே குறைகள் தீரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.