தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் 2018ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டதில், மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற 23 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள மாவட்ட வனத்துறை தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு, சில நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டு, உரிய கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டன.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான அகமலை, டம்டம் பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகின்றது. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது. இதனால், தற்போது குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கௌதமன் வெளியிட்ட அறிக்கையில், ‘கோடை காலம் தொடங்க உள்ளதால், வனப்பகுதியில் காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குரங்கணி – டாப் ஸ்டேசன் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு இன்று (பிப். 15) ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. மீண்டும் மறு அறிவிப்பு வெளியாகும் வரை தடை நீடிக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.