குரங்கு அம்மைக்கு எதிராக பெருந்திரளான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை என WHO ரஷ்ய பிரிவின் தலைவர் தெரிவித்தார்.
இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் ஜெர்மனி என உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவியுள்ளது. 51 நாடுகளில் 5,100 பேருக்கு இந்த குரங்கம்மை நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த நோய்க்கு எதிராக தடுப்பூசி போட வேண்டுமா என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் ரஷ்ய பிரிவின் தலைவர் மெலிட்டா வுஜ்னோவிக் கூறியதாவது, “குரங்கம்மைக்கு எதிராக பெருந்திரளான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை. ஆனால் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தொடர்பில் இருந்தவர்களுக்கும், ஆபத்தில் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. மேலும் கண்காணிப்பு, சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.