கடந்த 2 வருடங்களாக உலகநாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று இப்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் புதியதாக உருவான குரங்கு அம்மை நோய், இப்போது உலகம் முழுதும் பரவி வருகிறது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நுழைந்துள்ளது. இதுவரையிலும் 78 நாடுகளில் 18,000க்கும் அதிகமானோர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலக சுகாதார அமைப்பு சென்ற சில நாட்களுக்கு முன்பு குரங்கு அம்மையை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவித்திருந்தது. இவ்வாறு அதிகரித்து வரும் பாதிப்புகளுக்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது, உலகம் குரங்கு அம்மை அபாயங்களை தீவிரமாக எடுத்துக்கொண்டால் அதை தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது “நாடுகள், சமூகங்கள் மற்றும் தனி நபர்கள் குரங்கு அம்மை அபாயங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் கண்டிப்பாக குரங்கு அம்மை பரவுவதை நிறுத்தலாம்” என டெட்ரோஸ் தெரிவித்து உள்ளார். குரங்கு அம்மையால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதானோம் கூறினார். இதனிடையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 95 % பேர் இந்த 2 பகுதிகளிலும் உள்ளதாக அவர் கூறினார். குரங்கு அம்மை நோய் தொடர்பான தவறான தகவல்கள் இணையத்தில் வேகமாகப் பரவி தீங்கு விளைவிப்பதை தடுக்க சமூகஊடக தளங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.