குரங்கு அம்மை பெயருக்கு பதிலாக புதிய பெயர் வைக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதுவரை 39 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. உலகளவில் 72 உயிரிழப்புகள் உட்பட 1100 க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது. 29 உயிரியலாளர்கள் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு கடந்த வாரம் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது “குரங்கு அம்மை வைரஸ் பரவல் ஆப்பிரிக்காவின் தெளிவான தொடர்பு இல்லாமல் கண்டறியப்பட்டுள்ளது. ஊடகங்களில் ஆப்பிரிக்க நோயாளிகளின் புகைப்படங்களை பயன்படுத்துவது பாகுபாடு மற்றும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது” என்று தெரிவித்தனர்.
விஞ்ஞானிகள் தற்போதைய குரங்கு அம்மை என்ற பெயரை பாகுபாடு மற்றும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று விமர்சித்த பிறகு உலக சுகாதார நிறுவனம் நிபுணர்களுடன் இணைந்து குரங்கு அம்மை வைரஸின் பெயர்களை மாற்றுவது மற்றும் அது ஏற்படுத்தும் நோயின் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது என்று உலக சுகாதார நிறுவனம் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த தொற்றுக்கு விரைவில் புதுப் பெயர் வைத்து அளிக்கப்படும் என தெரிகிறது.