அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளை அச்சுறுத்திவந்த குரங்கு அம்மை நோய் இப்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. கேரளாவில் இதுவரையிலும் 3 நபர்களுக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையிலும் இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் நோய் அறிகுறி உள்ளவரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அவற்றில் குரங்கு அம்மை இல்லை என வந்துள்ளது. மத்தியஅரசு இந்தியாவில் 15 இடங்களில் இந்த நோய்க்கான ஆய்வகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் குரங்கு அம்மை நோய்க்கான ஆய்வகம் அமைக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் சென்னை கிண்டியிலுள்ள கிங் இன்ஸ்டியூட் ஆய்வகத்தை இதற்காக பயன்படுத்திகொள்ளலாம் என்று கூறிய அவர், அங்கே குரங்கு அம்மைக்கான ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழகத்திலுள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்படுகிறது.
அத்துடன் சர்வதேச செஸ் போட்டிக்கு வந்த வீரர்களுக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருக்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையில் 8 விடுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இரு வெளிநாட்டில் இருந்து வந்த செஸ்வீரர்களுக்கு லேசான அறிகுறி இருந்தது. எனினும் அவர்களுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் குரங்கு அம்மை நோய் இல்லை என வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.