குரங்கு அம்மை பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கு பொது சுகாதார துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில்: “உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருவதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து தேசிய நோய் தடுப்பு மையத்தின் அறிவுறுத்தலின்படி பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அந்த வகையில் இதுவரை கண்டறியப்படாத தோலில் ஏற்படும் கொப்பளங்கள் உடையவர்களையும், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா நாடுகளில் இருந்து கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தமிழகம் வந்த பயணிகள் யாருக்காவது இந்த அறிகுறி உள்ளதா? மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தொடர்ந்து பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்.
அப்படி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அழைக்கப்படுபவர்கள் குறித்து ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு குழுமத்தின் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சளி மற்றும் கொப்பளங்கள் மாதிரிகள் உடனடியாக புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும். ஆய்வில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டால் கடந்த 20 நாட்களுக்கு அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.