கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை வழியாக சென்னைக்கு தினமும் பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் குருவாயூரிலிருந்து தினசரி இரவு 11:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12:25 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. இதையடுத்து இரவு 8:30 மணிக்கு சென்னை சென்றடைகிறது. அதன்பின் மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து தினசரி காலை 9 மணிக்கு புறப்பட்டு மாலை 4:25 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 6:40 மணிக்கு குருவாயூர் ரயில் நிலையம் சென்றடைகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ரயில் தூத்துக்குடி டூ சென்னை இணைப்பு ரயிலாக இயக்கப்பட்டது.
ஆனால் 2020 ஆம் வருடம் புதிய ரயில்வே கொள்கையின்படி இணைப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி-சென்னை குருவாயூர் இணைப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டன. அதற்கு பதில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவில்லை. இதனிடையே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, இந்த ரயிலில் இருமார்க்கங்களிலும் 2 இரண்டாம் வகுப்பு உறங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.
அதன்படி சென்னையிலிருந்து மதுரை வழியாக குருவாயூருக்கு இயக்கப்படும் ரயிலில் (வ.எண்.16127) நாளை (மார்ச்10) முதலும், குருவாயூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயிலில் (வ.எண்.16128) வரும் 11 ஆம் தேதி முதலும் இந்த கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றது. அதனை தொடர்ந்து இந்த ரயிலில்,ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு உறங்கும் வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டிகள், ஒரு 2ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளிகள் இருக்கை வசதி மற்றும் பார்சல் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.