குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்மநபர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாம்பரத்தில் உள்ள ரயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடைந்த உடன் அனைத்து பெட்டிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த டயானா என்ற மோப்பநாய் அழைத்துவரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதுமாக சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சோதனை நடத்திய பின் தாம்பரத்திலிருந்து எழும்பூர் ரயில் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறக்கப்பட்டு சோதனைக்கு பின் மின்சார ரயில்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இரவு சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பின் வெடிகுண்டு மிரட்டல் வெறும் பொய் தகவல் என தெரியவந்தது. இதனையடுத்து ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பின் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து எழும்பூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தினால் தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.