குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டபோதும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்கள் மட்டுமே தற்போது வரை கைதாகி இருக்கின்றனர். முக்கியமான இடைத்தரகர் ஜெயக்குமார் இன்னும் கைதாகவில்லை.
இந்த முறைகேட்டின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகவில்லை. ஓம் காந்தன், மாணிக்கவேலுவுடன் தொடர்பு உடையவர்கள் யார் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் முதல் 42 பேரும், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள், தலைமைச் செயலகம் என பசையுள்ள அலுவலகங்களில் பணியாற்றி வருவது முதல் கட்டமாக கைதாகியுள்ள 9 தேர்வர்கள் மூலம் அம்பலமாகியிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சிபிசிஐடி அலுவலர்களிடம், தேர்வாணையம் புகார் அளித்த நிலையில், தற்போது வரை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த விக்னேஷ், திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வந்த சுதாராணி, குரூப் 4, குரூப் 2 ஏ முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய சித்தாண்டியின் சகோதரர் காரைக்குடி பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த வேல்முருகன், நெல்லை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஜெயராணி உள்ளிட்ட 8 பேரில் மேலும் ஒரு அலுவலருடன் சேர்த்து 9 பேர் கைதாகியுள்ளார்.
இவர்களைப் போல் மற்ற அனைவருமே, அதாவது 42 பேருமே மிக முக்கியமான துறைகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது. அவர்கள் எந்தெந்த துறைகளில் பணியாற்றி வருகிறார்கள் என்ற பட்டியலும் தேர்வாணையத்திடம் இருக்கிறது.
தரவரிசையில் அதிகபட்ச மதிப்பெண்கள் எடுத்தால் தான் முக்கியமான துறைகள் கிடைக்கும் என்று நன்றாக திட்டமிட்டு, முதல் 42 இடங்களில் முறைகேடு செய்த அனைவருமே இடம் பிடித்திருக்கின்றனர் .
கைதாகி இருப்பவர்களுக்கு பாதி சம்பளம் தொடர்ந்து வழங்கப்படுமா? என அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதும் போட்டித்தேர்வு பயிற்சியாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
குருப் 2 ஏ தேர்வு பணம் கொடுத்து முறைக்கேட்டின் மூலம் பணியில் சேர்ந்துள்ளதை காவல் துறை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர். அரசுப் பணியில் சேர்ந்த பின்னர் இரண்டு ஆண்டுகள் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாமல் இருந்தால் மட்டுமே தகுதிக்காண் பருவம் முடிக்க முடியும்.
2018ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த இவர்கள் அனைவரும் லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே இவர்களை, அரசு முழுமையாக பணி நீக்கம் செய்ய முடியும். அரசு பணியாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 42 பேரின் தேர்ச்சியையும் ரத்து செய்து அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் அவர்களின் பணிகள் பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.