வீட்டிலிருந்தே அரசு தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் வகையிலான புதிய வழி ஒன்று வேலைவாய்ப்பு துறையினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது, தேர்வர்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே தேர்வுக்கு தயார்படுத்தும் முறையில் ஆன்லைனில் உரிய இணையதளம் வாயிலாக பயிற்சியளிக்க உரிய வழிமுறைகளை வேலைவாய்ப்புத்துறையினால் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினார்.
மேலும் இந்த இணையதளத்தில் காணொளிக்காட்சி, மின்னணு பாடக்குறிப்புகள், மின் புத்தகங்கள்,போட்டி தேர்வுக்கான பயிற்சிகள் மற்றும் மாதிரி வினாத்தாள் போன்றவை இடம்பெற்றுள்ளதாக கூறினார். இதனைத் தொடர்ந்து இந்த இணையதளத்தில் இணைய, தேர்வர்கள் தங்கள் பெயர், பாலினம், தந்தை மற்றும் தாய் பெயர், முகவரி, ஆதார் எண் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு எண் கொடுத்து உள்நுழைந்து போட்டித்தேர்வு என்பதை தேர்வு செய்தபின் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.
அதிலும் குறிப்பாக எந்த தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதை தேர்வு செய்து அதற்கான பாட குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட குரூப்-2, 2-A தேர்விற்கான பயிற்சி வகுப்புகளும் இலவசமாக திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.