கொரோனா வார்டில் வைத்து நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்ஸிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் பல சுவாரசியமான நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கைனாகரி கிராமத்தை சேர்ந்த சரத்மோன் என்பவருக்கும் அபிராமி என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க நாள் முடிவு செய்யப்பட்டது. ஆனால் கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு மணமகனுக்கும், அவரது தாய்க்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் இருவீட்டாரும் குறித்த நேரத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதனால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை வாங்கி மணமகள் கவச உடை அணிந்து மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணக் காட்சி சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.