விழுப்புரம் அருகே குறித்த நேரத்தில் தலைமை ஆசிரியர் பள்ளியை திறக்காததால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் அருகே பொய்யாபக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக அருள் மலர் உள்ளிட்ட ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 109 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் பொய்யா பக்கத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க நிலை பள்ளியை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. காலை 9 மணி ஆகியும் ஆசிரியர்கள் யாரும் வராததால் பள்ளி திறக்காமலே பூட்டி கிடந்தது.
இதனால் நீண்ட நேரம் பள்ளிக்கு வெளியில் மாணவ-மாணவிகள் காத்திருந்தனர். சிலர் பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பி சென்று விட்டனர். பின்னர் காலை 9.05 மணி அளவில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வந்து பள்ளியை தாமதமாக திறந்தனர். அதன் பிறகு வீடு திரும்பி வந்த மாணவ மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வந்தனர்.
இந்த தகவல் புகைப்படத்துடன் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, முதன்மை மாவட்ட கல்வி அதிகாரி விழுப்புரம் மாவட்டம் கல்வி அலுவலர் காளிதாஸ் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதோடு தாமதமாக வந்த தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களின் விளக்கத்தைக் கேட்டு அறிந்தார். இந்நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளியை திறக்காத காரணத்திற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் மலரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா உத்தரவிட்டுள்ளார்.