சிகிச்சைக்காக மூதாட்டியை கட்டிலில் தூக்கிக்கொண்டு குறுகிய பாலம் வழியாக செல்லும் அவல நிலை ஏற்பட்டிருக்கின்றது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை அருகே இருக்கும் எட்டுக்குடி ஊராட்சியில் உள்ள நாகமரத்தடி தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இங்கு போதிய சாலை வசதி இல்லாததால் அங்கிருக்கும் குறுகிய பாலத்தை தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் இந்த பாலத்தில் தடுப்பு சுவர்களின்றி சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருக்கின்றது. இந்த பாலத்தில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாது. மோட்டார் சைக்கிள், சைக்கிளில் செல்பவர்கள் அச்சத்துடனே பாலத்தை கடக்க வேண்டும்.
இங்கே அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் இருக்கும் மூதாட்டி ஒருவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆட்டோவை அழைத்துள்ளார்கள். ஆனால் அந்த குறுகிய பாலத்தில் ஆட்டோ செல்ல முடியாததால் பாலத்துக்கு வெளியே நின்றது. இதனால் மூதாட்டியின் உறவினர்கள் மூதாட்டியை கட்டிலில் படுக்க வைத்து தூக்கிக்கொண்டு பாலம் வழியாக வந்து ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். இதனால் பொதுமக்கள் பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.