திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ் குமார் உள்பட அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது அடிப்படை வசதிகள், உதவித்தொகை உட்பட பல கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி கலெக்டர் விசாகன் உத்தரவு பிறப்பித்தார். மேலும் அகரம் பேரூராட்சி வி.காமாட்சிபுரத்தை சேர்ந்த மக்கள் அடிப்படைவசதிகள் கேட்டு மனு கொடுத்தனர். அவற்றில் வி.காமாட்சிபுரத்தில் 100க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாக்கடை, சாலை, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் இல்லை.
அத்துடன் சுடுகாடு இல்லாமல் ஓடையின் ஓரத்தில் உடல்களை அடக்கம் செய்கிறோம். இதனால் மழைக் காலத்தில் பெரும் சிரமமாக இருக்கிறது. அதேபோன்று 50-க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளதால் அங்கன்வாடி மையம் திறக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்பின் திண்டுக்கல் சின்னபள்ளப்பட்டி கிராமமக்கள் பாட்டிலில் பெட்ரோலுடன் மனு கொடுக்க வந்தனர். அப்போது காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பெட்ரோலை பறித்து சென்றனர். அதனை தொடர்ந்து கிராம மக்கள் கூறியதாவது, சின்னபள்ளப்பட்டியில் 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட 80 தொகுப்பு வீடுகள் இருக்கிறது. அவை அனைத்தும் சேதமடைந்துவிட்டதால் மழைக் காலத்தில் வசிக்க முடியவில்லை. இதனிடையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததோடு, உள்ளேயும் புகுந்து விட்டது.
இதன் காரணமாக வீடுகளில் வசிக்க முடியாமல் தவிக்கிறோம். ஆகவே தொகுப்பு வீடுகளை சீரமைத்து, மழை நீர் வராதவகையில் தடுக்க வேண்டும் என்று கூறினர். பின் தாடிக் கொம்புவை சேர்ந்த பெண்கள் குழந்தைகளுடன் வந்து மனு கொடுத்தனர். இவர்கள் கூறியிருப்பதாவது , ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 300க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். எனினும் பள்ளியில் வகுப்பறை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று கூறினர். அதேபோன்று பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்த பழனிச்சாமி (80) என்பவர் தன் பட்டாவில் திருத்தம் செய்து தரும்படி மனு கொடுத்தார். இதற்கென அவர் தன் இடுப்பில் கருப்புதுண்டை கட்டிக்கொண்டும், கையில் கருப்பு கொடியை ஏந்தியபடியும், வாயில் கருப்பு துணியை கட்டியும் வந்தார். அத்துடன் அவர் தனது மனுவை கழுத்தில் தொங்கவிட்டு இருந்தார்.