குறைதீர் கூட்டத்திற்கு கோரிக்கை பேனருடன் வந்து விவசாயி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் புதுப்பேட்டை பைத்தாம்பாடியில் வசித்து வருபவர் விவசாயி சிவகுரு(70). இவர் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு கோரிக்கை பேனருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் அவர் தனக்கு பாத்தியப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை அதே பகுதியில் வசித்த ஒரு நபர் பொய்யான ஆவணம் தயாரித்து அபகரித்து விட்டார்.
இதுகுறித்து காவல் நிலையத்திலும், வருவாய் துறையிலும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே இதை மீண்டும் நினைவு கூறுவதற்காக மனுவுடன் வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரை கலெக்டரிடம் சென்று மனு கொடுக்குமாறு காவல்துறையினர் தெரிவித்தார். இதனையடுத்து அவர் கலெக்டரிடம் சென்று மனு கொடுத்துவிட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.