கணபதி நகரில் ரூ 5 லட்சத்தில் அமைத்ததாக கூறப்படும் சிமெண்டு சாலை காணவில்லை என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்கள்.
விழுப்புரம் மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோலியனூரை அடுத்துள்ள அணிச்சம்பாளையம் கணபதி நகர் பகுதியில் வசித்த பொதுமக்கள் சார்பாக சங்கர் என்பவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியதாவது, எங்கள் கணபதி நகர் பகுதியில் கடந்த 2020 – 21 வருடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 5,17,000 மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை சிமெண்டு சாலை அமைக்கவில்லை.
இது குறித்து கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட அலுவலரிடம் எங்கள் நகருக்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கி சாலை அமைத்ததாக பொதுமக்களை ஏமாற்றி முறைகேடு செய்து உள்ளீர்களே என்று கேட்டோம். அதற்கு நான் அரசுப் பணியில் இருக்கின்றேன். என்னிடம் எதுவும் கேட்கக்கூடாது மீறி கேட்டால் என்னை அரசு பணியை செய்ய விடாமல் தொந்தரவு கொடுத்துள்ளார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிடுவேன் என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். ஆதலால் காணாமல் போன அணிச்சம்பாளையம் கணபதி நகரில் இருக்கின்ற சிமெண்டு சாலையை கண்டுபிடித்து தர வேண்டும். சிமெண்ட் சாலை அமைக்காமல் அரசு நிதியை முறைகேடு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.