கிருஷ்ணகிரி மாவட்டம் ஈசனூர் கிராமத்தை சேர்ந்த சிவராஜ் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவருடைய செல்போன் எண்ணிற்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் வீட்டுகடன் குறைந்த வட்டியில் தருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அந்த மெசேஜில் இருந்த அலைபேசி எண்ணிற்கு அழைத்து பேசியபோது காவியா என்ற பெண் எதிர்முனையில் இருந்து பேசியுள்ளார். லோன் தொகையை பெற்றுத் தருவதற்கான நடைமுறை செலவுகள் மற்றும் இன்சூரன்ஸ் செலவுகள் போன்றவைகளை முன்கூட்டியே கட்ட வேண்டும் என அந்த பெண் தெரிவித்தார்.
இதை நம்பிய சிவராஜ் மூன்று வங்கி கணக்குகளுக்கு ரூபாய் 6 லட்சத்து 94 ஆயிரத்து 38-ஐ அனுப்பினார். பணத்தை எடுத்துக் கொண்டதும் அந்தப் பெண் பேசுவதை தவிர்த்து விட்டார். இதில் சந்தேகம் அடைந்த சிவராஜ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். மேலும் காவியா மற்றும் பிரபாகரன் ஆகிய 2 பேர் சேர்ந்து ரூபாய் 6 லட்சத்து 94 ஆயிரத்து 38-ஐ மோசடி செய்ததாக சிவராஜ் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.