Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக தெரிவித்து…ரூ 96 லட்சம் அபேஸ்… 7 பேர் கைது…!!!

குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக தெரிவித்து ரூ 96 லட்சத்தை மோசடி சேர்ந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கடைவீதியில் நகை கடை வைத்து நடத்தி வருபவர் 47 வயதுடைய முருகன். சின்னசேலத்தில் வசித்த தியாகு என்பவருக்கும், முருகனுக்கும் வியாபார ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அட்சயதிருதியை ஒட்டி குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி கொடுப்பதாக முருகனிடம் தியாகு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனக்கு தெரிந்த நபர் ஒருவரின் செல்போன் எண் தருகிறோம். அவரிடம் பேசி குறைவான விலைக்கு தங்கத்தை வாங்கலாம் என்று முருகனிடம் தெரிவித்து அவருடைய நம்பரை கொடுத்தார்.

இதனை உண்மை என்று நம்பிய முருகன் தியாகு கொடுத்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரிடம் பேசிய நபர் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் பகுதியில் வசித்த பண்டரிநாதன்(65) என்பவர்.அப்போது பண்டரிநாதன் முருகனிடம் உங்களுக்கு எவ்வளவு தங்கம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு முருகன் தனக்கு இரண்டு கிலோ தங்கம் வேண்டும் என்று தெரிவித்தார். அதன் பின் இரண்டு கிலோ தங்கம் வாங்குவதற்கு ரூபாய் 96 லட்சத்தை கொண்டு வாருங்கள். உடனே வாங்க இல்லையெனில் வேறு நபருக்கு கொடுக்கப் போகிறேன் என்று முருகனிடம் பண்டரிநாதன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முருகன் ரூ 90 லட்சத்தை எடுத்துக்கொண்டு கருப்பம்புலத்திற்கு வந்தார். அப்போது பண்டரிநாதன் 850 கிராம் எடை கொண்ட தங்கத்தை முருகனிடம் கொடுத்தார். மீதமுள்ள நகையை பின்னர் தருவதாக கூறி அனுப்பினார். இதனையடுத்து  வேறு வழியில்லாமல் முருகன் தான் அழைத்து வந்த நபரிடம் 850 கிராம் நகையை கொடுத்து விட்டு தனியாக சென்றார். இதை அறிந்த பண்டரிநாதன் தனது ஆட்களை அனுப்பி முருகனை மிரட்டினார். அதன்பின் அவரிடம் இருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இது குறித்து வேதராண்யம் காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் 65 வயதுடைய பண்டரிநாதன், திருச்சியை சேர்ந்த கார் டிரைவர் 29 வயதுடைய விக்னேஷ், சென்னையை சேர்ந்த 32 வயதுடைய பாலகுமார், திருத்துறைப்பூண்டி எழிலூரை சேர்ந்த 42 வயதுடைய துர்க்காதேவி, கருப்பம்புலத்தை சேர்ந்த 43 வயதுடைய செல்லத்துரை, வடமழை மணக்காட்டை சேர்ந்த 32 வயதுடைய தனுஷ்கோடி, திருத்துறைப்பூண்டியை சேர்ந்த 25 வயதுடைய மணிமாறன் ஆகிய ஏழு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள், பைக்குகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக கூறி 96 லட்சத்தை மோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |