குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக கூறி ரூ 96 லட்சத்தை அபேஸ் செய்த வழக்கில் மேலும் 2 சொகுசு கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கடைவீதியில் நகை கடை வைத்து நடத்தி வருபவர் 47 வயதுடைய முருகன். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் பகுதியில் வசித்து வருபவர் பண்டரிநாதன்(65). இவர் முருகனிடம் குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக தெரிவித்தார். இதனை உண்மை என்று நம்பிய முருகன் ரூ 96 லட்சத்திற்கு 2 கிலோ தங்கம் வாங்க கருப்பம்புலத்திற்கு வந்துள்ளார்.
அப்போது முருகனிடம் 850 கிராம் எடைகொண்ட தங்கத்தை கொடுத்துவிட்டு மீதமுள்ள நகையை பின்னர் வந்து வாங்குங்கள் என பண்டரிநாதன் தெரிவித்து அனுப்பி வைத்துவிட்டார். இதனையடுத்து முருகன் தான் கூட்டி வந்த நபரிடம் 850 கிராம் நகையை கொடுத்துவிட்டு தனியாக சென்றுள்ளார். இதை அறிந்த பண்டரிநாதன் தனது ஆட்களை அனுப்பி மிரட்டி அவரிடம் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றுவிட்டார்.
இது குறித்து முருகன் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள், பைக்குகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து இந்த மோசடிக்கு பயன்படுத்தபட்ட மேலும் 2 சொகுசு கார்களை நேற்று முன்தினம் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இன்னும் 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.