தமிழகம் முழுதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் வழக்கு கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனவும், அதோடு குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க கோரி கீழமை நீதிமன்றத்தில் விண்ணப்பித்த போது மனு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறினார். இதேபோன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டும், வழக்கு கோப்புக்கு எடுக்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டங்கள் உயர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வந்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முதன்மை அமர்வு நீதிமன்றங்கள், நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதன்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் கோப்புக்கு எடுக்கப்படாத வழக்குகளின் எண்ணிக்கை, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நேரம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகளுக்கும், தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.