சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தேசிய, மாநில சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் கருத்து தெரிவித்தபோது, குற்றம் நடைபெறுவதை காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது என்பது ஆபத்தானது ஆகும். குற்றவாளிகளும் இதுபோன்ற சின்னங்களைத் தவறாக பயன்படுத்தி தப்பி விடுகின்றனர்.
நாட்டில் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்களா? என்பதை மக்களும் பார்ப்பார்கள் என்று கருத்து கூறியிருந்தார். தேசிய, மாநில சின்னங்களை தவறாகப் பயன்படுத்துவதை தடுப்பதற்காக கோரிய வழக்கில், காவல்துறை சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் வாகன விதிமீறல்களில், நம்பர் பிளேட் தொடர்பாக 1.55 லட்சம் வழக்குகளும், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது தொடர்பாக 4,600 வழக்குகளும் பதிவாகி இருந்தது. எனினும் தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தியதாக ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.