டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் 17 வயது பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஆசிட் வீசி சென்றுள்ளனர். இதில் அந்த மாணவியின் முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் “மாணவி மீது ஆசிட் வீசிய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “இதனை சகித்துக் கொள்ள முடியாது. குற்றவாளிகளுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். மேலும் டெல்லியில் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.