உங்கள் குலதெய்வத்தை பவுர்ணமி நாட்களில் வழிபட்டால் எவ்வளவு நன்மைகள் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான்! குலதெய்வமே நமக்கு எளிதில்அருளைத் தந்தருளும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேத் திகழும் என்பது ஐதீகம். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக் கூடாது. எமன் கூட ஒருவரது குலதெய்வத்தின் அனுமதி பெற்றுதான் உயிரை எடுக்கமுடியும்.
குலதெய்வம் என்பது நம் முன்னோர்களில் தெய்வமாக மாறி விட்ட புண்ணிய ஆத்மாக்கள் என்கிறார்கள் முன்னோர்கள். அந்தப் புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினைச் சார்ந்தவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பேணிக் காக்கும் வல்லமை படைத்தவர்கள். எனவேதான், அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள், கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாகஇருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு என்கின்றன ஞானநூல்கள்.
மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட, பெளர்ணமி தினத்தன்று விரதமிருந்து வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. மேலும் வருடத்தின் முதல் நாளன்று அதாவது சித்திரைத் திருநாளின் முதல்நாளில், குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்துவர குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும் என்பது உறுதி.
பொதுவாக ஒவ்வொரு மாத பெளர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி பெளர்ணமி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்துகிற விசேஷமான நன்னாள்!
எனவே அன்று குலதெய்வத்தை தேடிச் சென்று வழிபட வேண்டியது மிகமிக அவசியம். மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதை விட பெளர்ணமி தினத்தன்று வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும் என்கிறார் நடராஜ குருக்கள். கும்பகோணம் அருகில் உள்ள தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் கோயில் குருக்கள் இவர்.
அன்று குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால், நம் குலம் சிறக்கும். குடும்பமும் மேன்மை பெறும். குலதெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து நம் குடும்பமும் வம்சமும் காக்கப்படும். குலதெய்வம் என்பது ஒவ்வொரு குடும்ப வகையறாவைப் பொருத்தது.
அண்ணன்,தம்பி குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குலதெய்வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசி நமக்கு எளிதாக வந்து சேரும். கிராமங்களில் இருப்பவர்களுக்கு அவர்கள் அருகிலேயே குலதெய்வக் கோயில் இருக்கும்.
எனவே எளிதாக வழிபாடுகளை செய்து கொள்வார்கள். பலருக்கும் குலதெய்வம்… காடு, மலை, வயல்வெளி, சாலை வசதி இல்லாத இடம் என்றே இருக்கிறது. அதனால் எப்போதும் சென்றுவர முடியாது. ஆனால் குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். வருடத்துக்கு இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது.
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். அதாவது, பிறந்தவீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன்பு பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவன் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்குகின்றனர்.
பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும்வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்தபிரச்சினையும் சமாளிக்ககூடிய ஆற்றலைத் தரும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்தவீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழாக் காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள். ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்றவேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிகமிக முக்கியம்.
குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்குச் சென்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பது என்பது ஐம்பது சதவீதம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோயிலுக்கு அடிக்கடி செல்லுங்கள். அபிஷேகஆராதனைகள் செய்யுங்கள். அந்தக் கோயிலுக்கு முடிந்த அளவுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள்.
கிராமங்களிலிருந்து வெளியேறி நகர்ப்பகுதிகளில் குடியேறியவர்களுக்குக் குலதெய்வக் கோயிலுக்குச் செல்ல முடியாத சூழல் இருக்கலாம். அதற்காக, அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அதற்கு ஒரு பரிகாரம் உள்ளது. உங்கள் வீட்டிலேயே குலதெய்வப் படத்தை அலங்கரித்து, உங்கள் வீட்டுக்குப் பாரம்பரியமான முறையில், வழக்கமான வகையில் படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குலதெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்குக் கிடைக்கும்.
எனவே பங்குனி மற்றும் சித்திரை மாத பெளர்ணமியிலும் மாதந்தோறும் வருகிற பெளர்ணமி அன்றும் மறக்காமல் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள். பெளர்ணமி தோறும் குலதெய்வ வழிபாட்டைச் செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையும் பெளர்ணமி முழு நிலவுபோல் பிரகாசிக்கும் என்கிறார் நடராஜ குருக்கள்.